பூர்வ நாட்களை நினை, தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைச் கவனித்துப்பார், உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான், உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்.
– உபாகமம் 32:7

125 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரக்கன்விளை தென்னிந்திய திருச்சபை இன்று புதுப்பொலிவுடன், புது வடிவில், புத்தம் புதிதாய் காட்சியளிக்கிறது. இப்புதிய ஆலயம் தரப்பு மக்களையும் ஒரு கணம் நின்று திரும்பிப் பார்க்கச் செய்கிறது. இது நமக்கெல்லாம் பெருமை, இறைவனுக்கு மகிமை.
மேலை நாட்டு மிஷனரிகள் பாரக்கன்விளை பகுதியில் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு நற்செய்தி என்னும் நல்விதையை விதைத்தார்கள். ஆரம்ப காலத்தில் மக்கள் பனை ஓலையினால் கட்டப்பட்ட ஆலயத்தில் கடவுளை ஆராதித்து வந்தார்கள். ஆலய நிலம் பரம்பு விளை பரமானந்தம் என்பவரிடம் இருந்து பெறப்பட்டதாக அறியப்படுகிறது. ஆரம்ப கால திருச்சபை பொறுப்பாளர்களாக புது குணத்தான், தானியேல், ஹாரிஸ், நாகமணி ஆகியோர் செயல்பட்டார்கள். 1926-ம் ஆண்டு CUR சிங்களையர் என்னும் தெய்வ மனிதர் பாரக்கன்விளை மண்ணில் ஓடுகளால் வேயப்பட்ட வளர்த்தியான ஆலயம் கட்டி 19.6.1926-ல் பிரதிஷ்டை செய்தார். இந்த காலகட்டத்தில் பாரக்கன்விளை, தோப்பு விளை, பூயோடு, காட்டு விளை, செந்தரை மற்றும் தொழிக்கோடு ஆகிய கிராமங்களில் இருந்து 23 குடும்பங்கள் ஆலய ஆராதனைகளில் கலந்து கொண்டனர். திருச்சபையின் அதிவேக வளர்ச்சிக்கு மூலக்கல்லாக இருந்தவர் காலஞ்சென்ற திரு. டேவிட்சன் உபதேசியார் அவர்கள் ஆவார். அவரால் பல ஊழியர்கள் திருச்சபையில் இருந்து உருவாக்கப்பட்டார்கள். திரு. ராஜய்யன் நமது பேராயத்திலும், திரு. பாலையன் மலைநாட்டு ஊழியத்திலும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்கள். இறையியல் துறையில் வல்லுனரும் கிறிஸ்தவ உலக தலைவர்களில் ஒருவருமான Dr. இஸ்ரவேல் செல்வனாயகம் அவர்கள் உருவாகவும் திரு. டேவிட்சன் உபதேசியார் இளைஞர் மத்தியில் செய்த ஊழியமும், அவர் நடத்திய ஆண்கள் ஜெபக்குழுவே காரணம் ஆகும்.
27.12.1970-ல் திரு. டேவிட்சன் உபதேசியாரின் அயராத உழைப்பின் காரணமாக பழைய ஆலயத்தின் கோபுரம் மற்றும் மணிக்கூண்டு கட்டப்பட்டு பேராயர் I.R.H. ஞானதாசன் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1979-ம் ஆண்டு வரை கிளைத் திருச்சபையாக இருந்த பாரக்கன்விளை திருச்சபை 1.7.1979-ம் ஆண்டு ஆண்டல திருச்சபையாக உயர்வு பெற்றது. 27.10.1996-ல் பழைய ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு பேராயர் கிறிஸ்துதாஸ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வளர்ந்து வரும் திருச்சபையின் மக்களின் தேவையை உணர்ந்தும், ஓடுகள் போடப்பட்டிருந்த பகுதி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்த காரணத்தினாலும், புதிய ஆலயம் கட்டுவதற்கு 23.4.2000 அன்று அப்போதைய சபை போதகர் D.S. செல்வராஜ் தலைமையில் Dr. இஸ்ரவேல் செல்வனாயகம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. மிஷன் வீட்டுப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் ஆலயப் பணிகள் 2004-ம் ஆண்டு வரை நடைபெறவில்லை. மிஷன் வீட்டுப் பணிகள் 1998-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003-ம் ஆண்டு மே மாதம் நிறைவு செய்யப்பட்டு சபை போதகர் சாமுவேல் ஜெபர்சன் தலைமையில் பேராயர் தேவகடாட்சம் அவர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டது.
25.4.2004-ல் புதிய ஆலய கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆலய கட்டுமான பணியில் Dr. இஸ்ரவேல் செல்வனாயகம் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 16.8.2009 ஞாயிறு காலை 8.30 மணிக்கு சபை போதகர் T. வின்சென்ட் ராபர்ட் தலைமையில் பேராயர் G. தேவகடாட்சம் அவர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டது. ஒரு அழகான ஆலயத்தை வடிவமைக்க, உருவாக்க மூலைக்கல்லாக இருந்து செயல்பட்ட Dr. இஸ்ரவேல் செல்வனாயகம் அவர்களுக்கு பாரக்கன்விளை திருச்சபை மக்கள் என்றும் நன்றி கடன்பட்டுள்ளார்கள். Dr. இஸ்ரவேல் செல்வனாயகம் அவர்களை ஒரு கருவியாக எடுத்து பயன்படுத்திய இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
ஓலையாக மலர்ந்து ஒரு சில குடும்பங்களால் ஆராதிக்கப்பட்டு வந்த பாரக்கன்விளை ஆலயம் இன்றைக்கு பரந்து விரிந்து 550 குடும்பங்களாலும், கூட விளை, எபனேசர்புரம் போன்ற கிளை சபைகளாலும், தோப்பு விளை H.M.S. ஆலயத்தாலும் ஆலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. திருச்சபையின் சார்பிலும், திருச்சபை குடும்பங்களின் சார்பிலும் பல மிஷனரிகள் தாங்கப்பட்டு வருகிறார்கள். பாரக்கன்விளை திருச்சபையில் இருந்து நமது பேராயத்தில் போதகர்களாக, மிஷனரிகளாக பலர் பணியாற்றி வருகிறார்கள். இறையாசி நம் அனைவரோடும் இருப்பதாக.